விழுப்புரம், மே 24: குட்கா கடத்தியவர்களை போலீசார் சினிமா பட பாணியில் விரட்டி சென்று பிடித்தனர். போலீசார் மீது கார் ஏற்றி கொல்ல முயன்றதாக இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் புகையிலை, குட்கா போன்றவற்றுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனை மீறி நடைபெறும் விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு தடுப்பு மற்றும் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீசார் நேற்று பழைய பூங்கா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக வந்த காரை போலீசார் நிறுத்த முற்பட்ட போது காரை நிறுத்தாமல் போலீசார் மீது மோதுவது போல் வந்து மீண்டும் வேகமாக சென்றது.
இதையடுத்து போலீசார் சினிமா பாணியில் காரை விரட்டிச் சென்று பிடித்தனர். தொடர்ந்து காரில் சோதனையிட்டபோது தடை செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை, குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் திருவெண்ணெய்நல்லூர் அருகே பைத்தாம்பாடியை சேர்ந்த சதீஷ்(34), வி. சாலை சத்யநாராயணன் (36) என்பது தெரியவந்தது. இவர்கள் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள், காரை பறிமுதல் செய்தனர்.