திண்டிவனம், நவ. 5: காரில் 4128 புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்திச் சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் இருந்து மயிலம் வழியாக புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்திச் செல்லப்படுவதாக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையிலான, விழுப்புரம் மண்டல உதவி ஆய்வாளர் இனாயத் பாஷா மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மயிலம் அடுத்த செண்டூர் பகுதியில் அதி வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் போது காரில் 4,128 புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து புதுச்சேரி மாநிலம் பாகூர் பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் கதிரவன் என்கின்ற கதிர்(30), வானூர் அடுத்த வாழப்பட்டான்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜாராம் மகன் சூர்யா(28) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு பகுதியை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் சஞ்சீவி(34) என்பவரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 4128 புதுச்சேரி மது பாட்டில்கள், கார், பைக் ஆகியவற்றை திண்டிவனம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.