தர்மபுரி, செப்.1: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த 2 நாட்களாக மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. பலத்த காற்று மழைக்கு குடை மிளகாய், தக்காளி சாகுபடி செய்துள்ள பசுமை குடில்கள் சேதமடைந்து வருகின்றன. காரிமங்கலம் பகுதியில் ஏராளமான பசுமை குடில்கள் நாசமாகியுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட காரிமங்கலம் திண்டல் உச்சம்பட்டியைச் சேர்ந்த விவசாயி வடிவேல்(58) உள்ளிட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், திண்டல் கிராமத்தில் 2020ம் ஆண்டு பசுமை குடில் அமைத்து குடை மிளகாய், தக்காளி சாகுபடி செய்துள்ளேன்.
இதற்காக ₹40 லட்சம் வரை வங்கி மூலம் கடனுதவி பெற்றுள்ளேன். கடந்த 30ம் தேதி இரவு பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு பசுமை குடில் முற்றிலுமாக சேதமடைந்து விட்டது. இதனால், அங்கு வேறு பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.