காரமடை, ஜூலை 7: மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு நாள்தோறும் 5 முறை பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் காரமடை,பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், வடகோவை வழியாக கோவை ரயில் நிலையத்தை சென்றடையும். பணி நிமித்தமாகவும், பள்ளி, கல்லூரி செல்வதற்காகவும் நாள் தோறும் இந்த பயணிகள் ரயிலை பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காரமடை ரயில் நிலையத்தில் வழக்கம் போல பயணிகள் ரயிலுக்கு செல்வதற்காக டிக்கெட் புக்கிங் கவுன்டருக்கு சென்றனர். அப்போது, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சர்வர் பிரச்னை இருந்து வந்தது.
இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பயணிகள் வரிசையில் நின்று அவதிக்கு உள்ளாகினர். மேலும் மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ரயில்களை பிடிப்பதற்காக இந்த ரயிலில் செல்ல வேண்டிய கட்டாய நிலை இருந்ததால் கடைசி நேரத்தில் டிக்கெட் எடுக்க முடியாமல் சிலரும், பலர் ரயில் உரிய நேரத்திற்கு வரவே டிக்கெட் எடுக்க முடியாத நிலையிலும் ரயிலில் ஏறினர். இதனால் கடைசி நேரத்தில் பயணிகள் டிக்கெட் எடுக்க முடியாமல் டிக்கெட் பரிசோதகர் வந்தால் என்ன செய்வது? என தெரியாமல் ரயிலில் அவசர அவசரமாக ஏறி கோவைக்கு சென்றனர்.