காரமடை, செப்.13: ஊட்டியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று கோவை விமான நிலையம் வந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் காரமடை வழியாக ஊட்டி சென்றார். காரமடை-கண்ணார்பாளையம் சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 15வது மானியக்குழு நிதி ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டு வரும் பொது சுகாதார ஆய்வக கட்டிடம், பொதுப்பணித்துறை மூலம் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் செவிலியர் குடியிருப்பு கட்டிட பணிகளையும் பார்வையிட்டார்.
பின்னர், அங்கிருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பிரசவ அறை, உள்நோயாளிகள் பிரிவு, அறுவை அரங்கு, சித்த மருத்துவ பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர் வட்டார மருத்துவ அலுவலர் சுதாகரிடம் நாய்க்கடி, பாம்பு கடி மருந்துகள், திடீர் மாரடைப்பு ஏற்பட்டால் சிகிச்சை கொடுக்கும் மருந்து உள்ளிட்டவை போதுமான அளவில் இருப்பு உள்ளதா? அந்த மருந்து கொடுக்கப்பட்ட நோயாளிகளின் விவரம், அந்த நோயாளிகள் இதய சிகிச்சை நிபுணரிடம் பரிந்துரைத்த விபரம், தினந்தோறும் வருகை தரும் புறநோயாளிகள், உள்நோயாளிகள் எண்ணிக்கை குறித்தும், மாதத்தில் நடைபெறும் பிரசவங்கள் அதில் சுகப்பிரசவங்கள், அறுவை சிகிச்சை பிரசவங்கள் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி முறையாக வழங்கப்படுகிறதா? கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறதா? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு திணறடித்தார். காரமடை நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறையின் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகள் தாமதமாவது குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். நிறைவாக மருந்தகத்தில் நுழைந்த அமைச்சர் மா.சுப்ரமணியம், அங்கு மருந்தாளுநர் விடுமுறையில் இருந்ததால் அது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் சுதாகரிடம் ‘‘பார்மசிஸ்ட் லீவா உண்மையை சொல்லுங்க, லீவ் லெட்டர் கொடுங்க’’ என கேள்விகளை கேட்டு விடுமுறை கடிதத்தை வாங்கி சோதனை செய்தார். ஆய்வின்போது, மருத்துவர் தீனா, செவிலியர்கள், சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.