சத்தியமங்கலம், ஆக.4: சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி பண்ணாரி சோதனை சாவடி முதல் தமிழகம்-கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி வரை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 10 சக்கரங்கள் கொண்ட கனரக சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஆறு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் கர்நாடக மாநிலத்தில் இருந்து 10 சக்கரங்கள் கொண்ட 2 சரக்கு லாரிகள் தமிழகம் நோக்கி காரப்பள்ளம் சோதனை சாவடி வழியாக வந்துள்ளது. அப்போது கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறையினர் 2 லாரிகளையும் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து 2 லாரி ஓட்டுனர்களும், லாரிகளை அனுமதிக்க கோரி சாலையின் நடுவே லாரிகளை நிறுத்தி மற்ற வாகனங்களுக்கு வழி விடாமல் வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே மற்ற வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் சோதனை சாவடியில் லாரியை நிறுத்தி பிரச்னையில் ஈடுபட்ட 2 லாரி ஓட்டுனர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து லாரி ஓட்டுநர்கள் தங்களது லாரிகளை எடுத்து சாலையின் ஓரமாக நிறுத்தியதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது. இதனால், அடர்ந்த வனப்பகுதியில் தமிழகம்-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அவதி அடைந்தனர்.