வேலூர், ஜூன் 17: காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறையினர் விளக்கம் அளித்தனர். வேலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: காய்கறி மற்றும் பழப்பயிர்கள் உற்பத்தியில் பெரும் சவாலாக இருப்பது பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஆகும். சாறு உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன், அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ மற்றும் மாவுப்பூச்சி போன்றவை பயிர்களை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதில் மாவுப்பூச்சி அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தோட்டக்கலை பயிர்களில் மாவுப்பூச்சி தாக்கல் அதிகளவு உள்ளது. இதனால் இப்பயிர்களில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக மாவுப்பூச்சியின் தாக்குதல் அதிகரித்துள்ளது. பயிர்கள் வளர்ச்சி குன்றி மஞ்சள் நிறமாக மாறி பின் செடிகள் வாடி விடுகின்றன. இந்த மாவுப்பூச்சி ஒரு செடியில் இருந்து மற்ற செடிகளுக்கு எளிதில் பரவி விடுகிறது. இதனை அழிக்க மிகவும் பாதிக்கப்பட்ட பயிர்களில் இருந்து செடிகளை பிடுங்கி எடுத்து எரித்து அழித்துவிட வேண்டும். 3 சதவீதம் வேப்ப எண்ணெயை 25 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். மெட்டாரைசியம் அல்லது வெவேரியா பேசியானா 5 கிராம் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கும் நேரங்களில் புரோபெனோபாஸ் 2 மில்லி 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். அல்லது தையோமீதாக்சாம் 0.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்ததெளிக்கலாம். இதன் மூலம் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.