ஆறுமுகநேரி, மே 29: காயல்பட்டினத்தில் காயல் மாணவர் சமூக நல கூட்டமைப்பின் சார்பில் 10வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாணவர் விழிப்புணர்வு மற்றும் சிறுபான்மை உரிமை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. ஆறுமுகநேரியில் உள்ள வள்ளல் சீதக்காதி திடலில் நடந்த இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ரிஸ்வான் தலைமை வகித்தார். முகமது ஹூசைன் வரவேற்றார்.
மாவட்ட ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சாலமன், மதுரை உயர்நீதி மன்ற கிளை வழக்கறிஞர்கள் டேவிட் கணேசன், சரவணன், சாலைப்புதூர் ஏக ரட்சகர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் இஸ்ரவேல் தர்மராஜ், முன்னாள் தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் சேவியர், சமூக ஆர்வலர்கள் பாலசுப்பிரமணியன், அப்துல் மஜீத் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிறுபான்மை உரிமையை சரியாக பயன்படுத்தாத இஸ்லாமிய பள்ளிகள் என்ற தலைப்பில் மீரா சாகிபு சிறப்புரை ஆற்றினார்.
இதைத்தொடர்ந்து மாணவர் சலாஜூத்தீன் கருத்துரை ஆற்றினார். விழாவில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மற்றும் 2ம் இடங்களை பிடித்ததற்கான விருதுகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் சமூக சேவையாற்றிய அப்துல்லா சாகிபு, ஷேக், ஜெய்னுல் ஆப்தீன், அப்துல் மஜீத், ஷேக் அப்துல்காதர் சித்திக் ஆகியோருக்கு சமூக சேவைகளுக்கான சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.