சேலம், ஆக.10: சேலம் மாவட்டத்தில் பசுமை இயக்க திட்டத்தில் காப்புக்காடுகளில் மரக்கன்றுகள் நடவு செய்ய 3 லட்சம் குழிகள் வெட்டப்பட்டுள்ளது. பருவமழையை எதிர்நோக்கி வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். நாடு முழுவதும் வனப்பரப்பின் அளவு 33 சதவீதம் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களின் மூலம் வனப்பரப்பை அதிகரிக்கும் பணியில் வனத்துறை ஈடுபட்டுள்ளது. இதில், தமிழ்நாடு அரசு பசுமை இயக்கம் என்னும் திட்டத்தை செயல்படுத்தி வனத்துறை மூலம் மரக்கன்றுகளை நாற்றாங்காலில் உற்பத்தி செய்து, அதனை விவசாயிகள் மூலமும், வனப்பரப்பிலும் நடவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது.
நடப்பாண்டில் பல்வேறு திட்டங்களின் மூலம் நிதி ஒதுக்கீடு பெற்று, மரக்கன்று உற்பத்தி செய்துள்ள வனத்துறை நிர்வாகம், பருவமழை காலத்தில் நடவு பணியை மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு வனக்கோட்டத்திற்கும் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை பொருத்தளவில், சேலம், ஆத்தூர் என 2 வனக்கோட்டங்கள் உள்ளன. இங்குள்ள வனச்சரகங்களிலும், சமூக காடுகள் கோட்டங்களிலும் கிரீன் தமிழ்நாடு மிஷன், தமிழ்நாடு பல்லுயிர் பெருக்க பசுமையாக்கல் திட்டம், நபார்டு, மரகத பூஞ்சோலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் நிதி மூலம் தமிழ்நாடு பசுமை இயக்கத்தில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதில், சேலம் வனக்கோட்டத்தில் 8 லட்சம் மரக்கன்றுகளும், ஆத்தூர் வனக்கோட்டத்தில் 6.33 லட்சம் மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அந்தந்த வனச்சரகங்களில் உள்ள நாற்றாங்கால்களில் உற்பத்தி செய்து வைக்கப்பட்டு இந்த மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வனத்துறையினர் வழங்கி வருகின்றனர். மேலும் வனப்பகுதியில் உள்ள காப்புக்காடுகளில் நடவு செய்யவும் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதற்காக சரகம் வாரியாக அந்தந்த பகுதி காப்புக்காடுகளில் மரக்கன்றுகளை நடவு செய்வதற்காக குழிகள் வெட்டும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. இதுவரையில் சேலம், ஆத்தூர் வனக்கோட்டங்களில் உள்ள காப்புக்காடுகளில் 3 லட்சம் குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இந்த குழிகளில் பருவமழை தீவிரமாக பெய்யத் துவங்கியதும் மரக்கன்றுகளை நட முடிவு செய்துள்ளனர். அதற்காக வன ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.
சேலம் கோட்டத்தில் சேர்வராயன் தெற்கு, சேர்வராயன் வடக்கு, ஏற்காடு, டேனிஷ்பேட்டை, வாழப்பாடி, மேட்டூர் ஆகிய வனச்சரகங்களிலும், ஆத்தூர் கோட்டத்தில் கருமந்துறை, ஆத்தூர், தம்மம்பட்டி, கல்வராயன் வனச்சரகங்களிலும் காப்புக்காடுகளில் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான குழிகள் வெட்டப்பட்டுள்ளது. பருவமழை ஆரம்பிக்கவும் இக்குழிகளில் புளி, நாவல், இலுப்பை, பிலா, ஆச்சான், வேங்கை, ரோஸ்வுட், மூங்கில், புன்னை, கடுக்காய், காட்டுநெல்லி, தான்றி போன்ற மரக்கன்றுகளை நடவுள்ளனர்.
இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் மாவட்ட வனத்துறை மூலம் பசுமை இயக்க திட்டத்தின் கீழ் நடப்பாண்டு சுமார் 14 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நடவு பணி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ஒவ்வொரு வனச்சரகத்திலும் விவசாயிகளுக்கு தேக்கு, வேம்பு, மலைவேம்பு, சில்வர்ஓக், வேங்கை, புங்கன், சிவப்பு சந்தனம்உள்ளிட்ட மரக்கன்றுகளை வழங்கி வருகிறோம். வனப்பகுதியில் உள்ள காப்புக்காடுகளிலும், அடர்த்தி குறைவான காடுகளிலும் நாவல், இலுப்பை, பிலா, ஆச்சான், வேங்கை, மூங்கில், புன்னை உள்ளிட்ட மரக்கன்றுகளை நடவு செய்ய 3 லட்சத்திற்கும் அதிகமாக குழிகள் வெட்டியுள்ளோம். பருவமழை பெய்யத் துவங்கியதும், அக்குழிகளில் மரக்கன்றுகளை நடுவோம். அதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்,’’ என்றனர்.