செய்யாறு, ஆக. 13: வரதட்சணை கேட்டு தகராறு செய்து மனைவி மற்றும் மாமியாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ராணிப்பேட்டை தனியார் கம்பெனி ஊழியரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவை அப்பாதுரை பேட்டையை சேர்ந்தவர் வினோத்(29), தனியார் கம்பெனி ஊழியர். இவர் எதிர்வீட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகள் கோமதியை(23) காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு புவனேஷ்(3) என்ற மகன் உள்ளான். இந்நிலையில் வினோத், கோமதியிடம் உனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வரதட்சணை வாங்கி வா எனக்கூறி அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 2மாதங்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் கோமதி கோபித்துக்கொண்டு தனது மகனை அழைத்துக்கொண்டு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நல்லாளம் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று விட்டாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் வினோத் நல்லாளம் கிராமத்திற்கு சென்று கோமதியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் ஆபாசமாக பேசி சரமாரி தாக்கினாராம். இதை கோமதியின் தாயார் சாந்தி தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வினோத், கருங்கல்லால் சாந்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் படுகாயம் அடைந்த 2பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு 108ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கோமதி அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ்மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர். பின்னர் அவரை செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வந்தவாசி கிளைச்சிறையில் நேற்று அடைத்தனர்.