ஒடுகத்தூர், ஆக.4: ஒடுகத்தூர் அருகே வரதட்சணை கொடுமையால் இளம் பெண்தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒடுகத்தூர் அடுத்த முத்துகுமரன் மலை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(26), இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பிரியாணி கடையில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த கோமதி(23), என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து, மணிகண்டன் ஒசூரில் வேலை செய்து வந்துள்ளார். அவர், அவ்வப்போது வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவரது மனைவியிடம் வரதட்சனை கேட்டு பிரச்சனை செய்துள்ளார்.
இந்த நிலையில், நேற்றுமுன்தினமும் கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், மணிகண்டன் அவரது மனைவியை அடித்ததாக கூறப்படுகிறது. இதில், மனவேதனையடைந்த கோமதி நேற்று அதிகாலை வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிந்து மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 ஆண்டுகளில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ கவிதா தலைமையில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.