காஞ்சிபுரம், செப்.3: காஞ்சிபுரம் அருகே காதல் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, 5வது மாடியிலிருந்து குதித்து பெண் பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட காரைப்பேட்டை பகுதியில் பிரபல தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ – மாணவிகள் கல்வி பயின்றும், பயிற்சி மருத்துவர்களாகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த, தனியார் மருத்துவ கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஷெர்லின் (23). 5ம் ஆண்டு மருத்துவம் படித்துக்கொண்டு, பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையின் 5வது மாடியிலிருந்து கீழே குதிக்க நீண்டநேரமாக மாடியின் விளிம்பில் உட்கார்ந்துக்கொண்டு, எல்லோருக்கும் மரண பயத்தை உண்டாக்கி கொண்டிருந்தார். பதட்டத்துடன் எல்லோரும் கவனித்து கொண்டிருந்த நேரத்தில், ஒருசில வினாடிகளில் 5வது மாடியிலிருந்து ஷெர்லின் கீழே குதித்தார். இதில், பலத்த படுகாயமடைந்த ஷெர்லினை மீட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொன்னேரிக்கரை போலீசார், ஷெர்லின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குபதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,ஷெர்லின் மருத்துவ படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது, காதல் தோல்வி ஏற்பட்டதால் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருந்தார் என்றும், அதற்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
மன அழுத்த சிகிச்சைக்கு பிறகு ஷெர்லின் மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கி, 5ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்துக்கொண்டு பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது, தந்தை வெளிநாட்டில் உள்ள நிலையில், இவரது பாதுகாப்புக்காக ஷெர்லின் தாயார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகிலேயே வீடு எடுத்து தங்கி, தனது மகளை கவனித்துகொண்டு வந்துள்ளார். இந்நிலையில்தான், காதல் தோல்வியின் மன அழுத்தம் காரணமாக, ஷெர்லின் 5வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.