திருத்தணி, ஜூன் 10: திருவாலங்காடு அருகே காதல் திருமண விவகாரத்தில் வீடு புகுந்து சிறுவனை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே உள்ள களாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜா என்பவரின் மகன் தனுஷ் (23). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா ஸ்ரீ (21) என்ற இளம் பெண்ணுக்கும் சமூக வளைத்தளம் மூலம் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த மாதம் 15ம் தேதி திருமணம் செய்துகொண்டு தலைமறைவானதாக கூறப்படுகிறாது.
இந்தநிலையில் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டதை தெரிந்துகொண்ட பெண்ணின் குடும்பத்தினர் திருவாலங்காடு அருகே களாம்பாக்காத்தில் உள்ள தனுஷ் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த தனுஷின் தம்பியான இந்திரசந்த் (16) என்ற சிறுவனை காரில் வந்த கும்பல் கடத்திச் சென்றது. இதுகுறித்து தனுஷின் தாயார் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு புகார் செய்தார். இதற்கிடையே சிறுவனை கடத்தியவர்கள் மீண்டும் அழைத்து வந்து வீட்டில் விட்டனர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வனராஜா (55), மணிகண்டன் (49), கணேசன் (47) ஆகிய 3 பேரை கைது செய்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.