வேலூர், ஜூலை 2: காட்பாடி அருகே சிறுமியை காதல் திருமணம் செய்து 4 மாத கர்ப்பிணியாக்கிய புதுமாப்பிள்ளை மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரியை சேர்ந்தவர் விக்ரம்(25), கட்டிட மேஸ்திரி. இவருக்கும் கே.வி.குப்பம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இதையறிந்த அவர்களது பெற்றோர் இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனை செய்வதற்காக விக்ரம், மனைவியை அழைத்துச்சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. திருமண வயதை எட்டாமல் சிறுமி கர்ப்பம் அடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து குழந்தைகள் நல அதிகாரிகள் காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், சிறுமியை திருமணம் செய்த விக்ரம் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.