Tuesday, June 6, 2023
Home » காதல் ஒரு மேஜிக்

காதல் ஒரு மேஜிக்

by kannappan

நன்றி குங்குமம் தோழி திருமணத்திற்குப் பின் ஒருவருக்கு விபத்து நடந்து டிசபிளிட்டி ஆனால் என்ன செய்ய முடியும்.; நண்பர் மாதிரிப் பழகும் கணவர் கிடைக்கிறதுதான் ரொம்ப முக்கியம் எனப் பேசத் தொடங்கினார் விசாகனின் மனைவி ஷாலினி. எனது ஊர் ஐதராபாத். மேட்ரிமோனியில்தான் என்னைப் பார்த்து அவர் விருப்பம் தெரிவித்தார். நானும் பேசிப்பார்க்கலாமே என போனில் முதலில் பேசினேன். பேசிய பிறகு உறுதியில்லை யோசிச்சு சொல்றேன்னு சொன்னேன். உடனே அவர் டக்குன்னு கோபப்பட்டு, ஓ.கே.ன்னாலும் ஓ.கே. இல்லைன்னாலும் எனக்கு ஒரு பிராப்ளமும் இல்லைன்னு பட்டுன்னு கோபமாகச் சொல்லி, டக்குன்னு போனை வச்சுட்டாரு. இது நடந்தது 2008 டிசம்பர் மாதம். அவர் கோபப்பட்ட பிறகே நான் யோசிக்க ஆரம்பித்தேன். சிரித்தவர்… சிம்பத்திய கிரியேட் பண்ணாத அவரோட அந்த போல்ட்னஸ் எனக்கு ரொம்பப் பிடித்தது என்கிறார். நண்பர்கள் உதவியுடன் ஜனவரி 26ல் விசாகனை நேரில் பார்க்க நான் சென்னை வந்தேன். இரண்டு நாள் அவர் வீட்டிலே தங்கியபோது, இன்னும் அவரை எனக்கு ரொம்பப் பிடித்தது. அவரைப் பற்றி அனைத்தையும் பேசினார். அவர் பேசிய விதம்… அவரின் வே ஆஃப் பிகேவியர் எல்லாமே பிடித்தது.; யார் உதவியும் இன்றி அவரே அவரை மேனேஜ் செய்வதும், அவரின் குடும்பத்தினர் சப்போர்ட் இதெல்லாம் மேலும் என்னை இம்ப்ரஸ் செய்தது. அவரிடம் பேசிப் பழகிய பின் அவரது டிசபிளிட்டி என் கண்களுக்கு சுத்தமாகத் தெரியவில்லை என அந்தப் பரவச நாட்களை தன் நினைவுக்குள் கொண்டு வந்தார் ஷாலினி. விசாகனின் தன்னம்பிக்கைக்கு முழுக்க முழுக்க அவரின் குடும்பம்தான் முக்கியக் காரணம். விசாகனின் அப்பாவும் அம்மாவும் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய ரோல். ஒரு நார்மல் குழந்தை மாதிரியான எண்ணத்திலே அவரை வளர்த்து இருந்தார்கள் என்கிறார். நான் ஹைதராபாத்தில் +2 படிக்கும்போதே என் அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட, எனக்கு அடுத்து இரண்டு தம்பிகள்வேறு படித்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் நானே குடும்பப் பொறுப்பை எடுத்துக்கொண்டு ஒரு பள்ளியில் வேலைக்குச் சென்று கொண்டு இருந்தேன். என் அம்மாவிடம் என் திருமண முடிவைச் சொன்னபோது, இன்னும் நல்ல பையன் கிடைப்பான், நீ ஏன் இந்த முடிவு எடுக்குற வெயிட் பண்ணலாம் எனச் சொன்னார். ஆனால் விசாகனை நேரில் பார்த்த பிறகு அம்மாவிற்கும் அவரை பிடித்துவிட்டது. விசாகனும் என்னைப் பார்க்க ஹைதராபாத்திற்கு தனியாகவே வந்து மீண்டும் என்னை சந்தித்தார். பிறகு இருவீட்டாரும் இணைந்து திருமண ஏற்பாட்டைச் செய்தார்கள்.ஷாலினியைத் தொடர்ந்த விசாகன்… பிறந்ததில் இருந்தே நான் வீல் சேர்யூஸர்தான். 3 மாதக் குழந்தையிலே எனக்கு போலியோ பாதிப்பு. என்னோட வலது கை மற்றும் இரண்டு கால்கள் செயல் இழந்த நிலையில், கழுத்துக்குக் கீழ் இயக்கம் இல்லை. 90 சதவிகிதமும் ஊனம் என்றது மருத்துவச் சான்றிதழ். என் உடம்பில் 15 சர்ஜரிகள் செய்யப்பட்ட நிலையில், +2 வரை நார்மல் பள்ளியில் நார்மல் நண்பர்களுடன் இணைந்துதான் படித்தேன். எனவே இதனை நான் ஒரு குறையாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு சில உதவிகளைத் தவிர; நானாகவே இயங்கத் தொடங்கினேன். நண்பர்களோடு சேர்ந்து எல்லா இடத்திற்கும் வீல்சேரிலே செல்வேன். மற்றவர்கள் பார்வையை நான் எப்போதும் பொருட்படுத்தியதில்லை. நான் வரவில்லை என்றாலும் நண்பர்கள் என்னை விட மாட்டார்கள். எம்.காம் வரை படித்தேன். கோவா, ஹைதராபாத் என லாங் டிரைவிங் எங்கு சென்றாலும் ஹேன்ட் கன்ட்ரோல் மாடிஃபைட் காரை நானே ஓட்டுவேன். கார் ஓட்டுவது எனக்கு ரொம்பவே பிடித்த விசயம். சொந்தமாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க் ஒன்றையும் நடத்தி வருகிறேன். வீல் சேரில் இருக்கும் எனது புகைப்படத்தை மேட்ரி மோனியலில் பதிவேற்றி எல்லாவற்றையும் கிளாரிட்டியுடன் நாங்கள் வெளிப்படுத்தினாலும், ஷாலினி நார்மல். வீல்சேரில் இருப்பவர்களை தூரத்தில் மட்டுமே பார்த்திருப்பார். டிசபிளிட்டியினை மட்டும் நேரில் பார்க்காமல் உணரவே முடியாது. மேலும், திருமணம் என்பது லைஃப் டைம் கமிட்மென்ட். ஷாலினிக்குத் தெரியாமல் எதுவுமே இருக்கக் கூடாது என என்னைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லி இருந்தேன். என்னை நேரில் வந்து பார்த்தபோது, ஷாலினியிடம் எந்த வித்தியாசமான ரியாக்‌ஷனும் இல்லை. ஒரு நார்மல் பெர்ஷனை பார்ப்பது மாதிரிதான் பார்த்தார். என்னைத் திருமணம் செய்யும் முடிவை எடுத்தபோது அவரின் வயது 23. அந்த அக்ஷப்டன்ஸ் ஷாலினிக்கு உள்ளே இருந்து வந்தது.2009ல் எங்கள் திருமணம். வெற்றிகரமாக பத்து வருடம் கடந்தாச்சு. திருமணத்திற்குப் பிறகு சிலருக்கு தன் வாழ்க்கையத் தியாகம் செய்த மாதிரியான எண்ணம் வரும். அந்த எண்ணமெல்லாம் ஷாலினியிடம் இல்லை. நார்மல் பெர்ஷனோட வாழுகிற மாதிரியான மகிழ்ச்சிதான் எங்கள் வாழ்க்கையிலும் நீடிக்கிறது. எனது தொழிலிலும் ஷாலினி ரொம்பவே உதவியாக இருக்கிறார் என்றார். அவரைத் தொடர்ந்த ஷாலினி, அவர்களும் நம்மைப்போல் நார்மல்தான். பரிதாபப்பட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் நாங்கள் எப்போதுமே நண்பர்கள்தான். அப்படித்தான் பேசிக் கொள்வோம். கணவன் மனைவி மாதிரி எந்த ஒரு ரெஸ்டிரிக்ஷனும் எங்களுக்குள் இல்லை. கம்போர்ட் ஜோன்லே எங்களை எப்போதும் வைத்துக் கொள்வோம்…பேசுவோம்.. சிரிப்போம்… விவாதிப்போம்.. சண்டை போடுவோம்.. சேர்ந்துக்குவோம்…; நண்பர்கள் மாதிரித்தான் வாழ்க்கை ஜாலியாப் போகுது. எல்லா ஜோடிகளையும் மாதிரி சினிமா…ஊர் சுத்துறது என இருப்போம்… எழுந்து நடக்க மட்டுமே அவரால் முடியாது. ஆனால் எங்கு வெளியில் சென்றாலும் அவரே கார் ஓட்டுவார். நீண்ட தூரம் காரை ஓட்டும் அளவுக்கு அவரிடம் தன்னம்பிக்கை உண்டு. எல்லாவிதத்திலும் அவர் எனக்கு மிகப் பெரிய சப்போர்ட். எனக்கு சின்ன வயதில் ஃபேஷன் டிசைனிங் படிக்கும் ஆர்வம் இருந்தது. திருமணம் ஆன புதிதில் அதை தெரிவித்திருந்தேன். அவர் என்னை நிஃப்டில் இணைத்து மாலை நேர வகுப்பில் டிப்ளமோ படிக்க வைத்து சப்போர்டாக இருந்தார். படிப்பு முடிந்ததும் எல்லோரையும்போல் நார்மல் உடைகளைத்தான் வடிவமைத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் டிஃப்ரென்ட் ஏபிள் பியூப்பிளுக்கு ஏன் ‘அடாப்டிவ் க்ளோத்’(adaptive cloth) பண்ணக் கூடாது என்ற எண்ணம் வந்தது. அந்த எண்ணம் வர விசாகனே காரணம். நாங்கள் நிறைய டிராவல் பண்ணுவோம். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அவரை டிரான்ஸ்பர் செய்யும்போது பலருக்கும் எந்த இடத்தில் அவரை எப்படிப் பிடித்து தூக்க வேண்டும் எனத் தெரியாது. உடலில் கை வைக்காமல் உடையினைப் பிடித்து தூக்க வசதியாகவும், தங்கள் உடைகளை விரைவில் சுலபமான முறையில் அவர்களே அணிவதற்கும், டாய்லட்டிங் போன்ற வசதிகளுக்கு ஏற்ற வகையிலும் உடைகளை டிசைன் செய்தேன். அந்த; உடை அவருக்கு மிகவும் பயனாக இருந்தது.; இதைப் பார்த்த நண்பர்கள் சிலர், நைட்டி அணிவதுபோல் புடவையை டிசைன் செய்து தர முடியுமா எனக் கேட்க, அதையும் டிசைன் செய்து கொடுத்தேன். ஐடியாக்கள் சக்ஸஸ் ஆக, மற்ற டிசபிளிட்டிகளின் தேவைக்கேற்ப கஸ்டமைஸ்ட் உடைகளை டிசைன் செய்யத் தொடங்கினேன். இப்படித்தான் எங்களின் “சுவஸ்த்ரா டிசைனிங்” (Suvastra Designs) உருவானது.அடாப்டிவ் உடைகளை அனைவரும் அறியும்விதமாக, வீல் சேர் பெர்ஷனோடு நார்மல் பெர்ஷன் இணைந்து; ‘இன்குளூசிவ் அடாப்டிவ் க்ளோத் ஃபேஷன் ஷோ’வாக அதனை மாற்றினோம். நிறையவே எக்ஸ்போஷர் கிடைத்தது. இதுவரை 11 ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளை நடத்திவிட்டோம். 50க்கும் மேற்பட்ட வீல்சேர் மாடல்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். மிகச் சமீபத்தில் ஒரு கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்டு ஃபேஷன் ஷோவையும் நடத்தினோம். இதில் இடம்பெற்ற; மாற்றுத் திறனாளி மாடல்களின் திறமையும், தன்னம்பிக்கையும் நிறையவே வெளிப்பட்டது. என் கணவர் விசாகனும் ஒரு மாடலாக இதில் இருக்கிறார் எனச் சிரித்தவாரே விசாகனை பார்க்க…தொடர்ந்த விசாகன்.. ரேம்ப்வாக் மாடலாக நான் வருவேன் என்றெல்லாம்; கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இவை அத்தனையும் எனக்கு; ஷாலினியால் கிடைத்தது. ஒரு நிமிடம்கூட அவள் இல்லாத வாழ்வை நினைக்க முடியவில்லை. அந்த அளவுக்கு எங்களுக்குள் ஒரு அந்நியோன்யம் உண்டு… கண்ணை மூடி காதலை சிலாகிக்கிறார் விசாகன்…தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi