குடியாத்தம், ஆக.27: பெற்றோர் வீட்டில் அடைத்து வைத்திருக்கும் காதலியை மீட்டு திருமணம் செய்து வைக்க வேண்டும் என குடியாத்தம் மகளிர் போலீசில் வாலிபர் புகார் அளித்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் 27 வயது வாலிபர். இவர் நேற்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் 12ம் வகுப்பு வரை படித்து தற்போது கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறேன். நான் பள்ளியில் படிக்கும் போது எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. தற்போது எங்கள் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவரவே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். எனவே அவரை மீட்டு எனக்கு திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து மனுவை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சாந்தி சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரது பெற்றோரை காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது அந்த பெண் போலீசாரிடம் கூறுகையில், ‘நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் படிக்கும் போது நண்பர்களாக மட்டுமே பழகி வந்தோம். நாள் யாரையும் காதலிக்கவில்லை. அவரை திருமணம் செய்ய விருப்பமில்லை’ என கூறினார். அதனடிப்படையில், போலீசார் புகார் அளித்த வாலிபருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் போலீஸ் நிலையத்தில் பரபரப்ைப ஏற்படுத்தியது.