வேலூர், ஆக.14: பள்ளிகொண்டாவில் பெற்றோர் மீட்டபோது பிளஸ்1 மாணவி காதலனுடன் சேர்ந்து விஷம் குடித்து மயங்கினார். தொடர்ந்து இருவரும் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஜமால்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா(21). இவர் அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை காதலித்து வந்துள்ளார். மேலும் கடந்த 9ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பள்ளிகொண்டாவில் உள்ள ஒரு வீட்டில் ஜீவாவுடன் மாணவி தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இருதரப்பு பெற்றோரும் அங்கு சென்று, ஜீவா மற்றும் மாணவியை மீட்டு காரில் அழைத்து வந்தனர். சிறிது தூரம் சென்றதும், காதலனுடன் சேர்ந்து விஷம் குடித்துவிட்டதாக கூறிய மாணவி மயங்கினார். இதையடுத்து ஜீவாவும் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவர்களை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அரியூர் போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.