மன்னார்குடி, ஜூன் 3: மன்னார்குடியில் காலங்களால் கரைக்க முடியாத கரிக்கோட்டு ஓவியங்களை சாலை ஓரங்களில் ஓவியங்கள் வாழ்வை நகர்த்தும் ஓவியர் ஒருவர். ஆதிகால மனிதன் பாறைகளில் கூரிய கற்களையும், கரித்துண்டுகளைக் கொண்டும் வரைந்த ஓவியங்கள் தொடங்கி, நவீன AI தொழில் நுட்பத்திலான ஓவியங்கள் வரை பார்த்தாயிற்று. டிஜிட்டல் பிளக்ஸ் போர்டுகள் வந்த பின்பு கடைகளில் பெயர் பலகைகளை ஓவியர்கள் வண்ணங்களை தொட்டு வரைந்து எழுதும் வழக்கம் காலாவதியாகி விட்டது. இன்னும் ஆதி காலத்தின் அசல் வடிவங்களான கரி மற்றும் வெள்ளை சாக்கட்டிகள் கொண்டு வரையும் ஓவியங்கள் சாகாவரம் பெற்று இருப்பது இன்றைக்கும் சாலையின் ஓரங்களில் வயிற்றுப் பிழைப்பிற்காக வரையும் சாலை யோர ஓவியர்களால் தான். அப்படியான ஓவியர்கள் ஒருவர் தான் மன்னார்குடி கண்ணன் (56) என்பவர்.
காதில் கேட்கும் சக்தி குறைவாக உள்ள இவர் கடவுள்கள், நடிகர்கள், இயற்கை காட்சிகள், விலங்குகள் என கரித்துண்டுகளாலும், வெள்ளை சாக்கட்டி களாலும் சாலை ஓரங்களில் வரையும் ஓவியங்கள் வெகுபிரபலம். இந்த ஓவியங்களை பார்ப்பவர்கள் எளிதில் கடந்து விட முடியாதபடி ஈர்க்கும் தன்மை உடையவை. கடந்த 20 ஆண்டுகளாக வயிற்றுப் பிழைப்பிற்காகவும், ஆதிகால இந்த ஓவியக் கலை மறைந்து விடக்கூடாது என்பதற்காகவும் பொது மக்கள், மாணவர்கள் அதிகம் கூடும் பகுதிகளின் சாலையோரங்களில் தொடர்ந்து வரைந்து வருகிறார். வரைந்து முடித்ததும் அந்த ஓவியங்கள் மீது விழும் சில்லரைக் காசுகளின் சத்தங்களே இவரின் வயிற்றுப்பாட்டிற்கான சங்கீதங்கள். இத்தகைய சாலையோர ஓவியர்களின் எண்ணிக்கையும் அருகி வருவது கவலை அளிக்கிறது. தமிழக அரசு இத்தகைய ஓவியர்களுக்காக ஏதேனும் நலத்திட்டங்கள் தீட்டி அவர்களின் வாழ்வையும் ஒரு அழகிய ஓவியம் ஆக்க வேண்டும் என்பதே அனைவரையும் எதிர்பார்ப்பாக உள்ளது