திருவெறும்பூர், நவ.21: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காட்டூர், அரியமங்கலம், பொன்மலை பகுதியை சேர்ந்த திமுக கட்சியின் பாக முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் அரியமங்கலத்தில் நடந்தது. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் தமிழககல்வித்துறை அமைச்சருமான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூட்டத்தில் தலைமை வகித்து பேசியதாவது:
வரும் 2024ம் ஆண்டு நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தல் நம் நாட்டை காக்கின்ற போர்.
இப்போரில் நாம் வெற்றி பெற வேண்டுமானால் நவம்பர் 25,26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிற முகாம்களில் முழுமையாக கலந்து கொண்டு புதிய வாக்காளர்களை சேர்ப்பதும், இறந்த மற்றும் வெளி ஊரில் குடியேறிய வாக்காளர்களை பெயர் நீக்கம் செய்வது போன்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும் மாவட்ட திமுகவால் நியமிக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் இதை கண்காணிக்கும்படி அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், மாநகரக் கழக துணைச் செயலாளர்கள் சந்திரமோகன், பொன்.செல்லையா, பகுதி செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், விஜயகுமார், சிவா மாவட்ட அணி நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.