தஞ்சாவூர், ஆக. 28: பாபநாசம் தாலுக்கா மருவத்தூர் பகுதியில் காட்டுப் பன்றிகள் வயலுக்குள் புகுந்தததால் பல ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா மருவத்தூர், நெய்குன்னம், தீபாம்பாள்புரம், காட்டுவா, மலையபுரம் உள்ளிட்ட பகுதியில் தற்போது சம்பா நடவுக்காக நாற்றங்கால் அமைத்து விதை தெளிப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பகுதியில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகின்றன. இப்பகுதியில் விவசாயிகள் சுமார் 1200 ஏக்கரில் நெல் நடவுக்காக நாற்றங்கால் அமைத்து நெல் விதைத்திருந்தனர்.நேற்று காட்டு பன்றிகள் கூட்டமாக வந்து நெல் விதைத்த நாற்றங்காலை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன. விவசாயிகள் வயலுக்கு சென்று நாற்றங்காலை பார்த்த போது காட்டுப்பன்றிகள் நாட்றாங்காளை சேதப்படுத்தியது தெரியவந்தது.
இதைக் கண்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை உடனடியாக பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வேளாண்துறை சார்பில் காட்டு பன்றிகள் சேதப்படுத்திய இடத்தில் ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.