காட்டுமன்னார்கோவில், ஜூன் 11: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள குருங்குடி கிராமத்தில் சாலையின் இருபுறமும் விவசாய நிலங்கள் உள்ளது. இதனால் புள்ளி மான்கள், முயல், மயில் போன்ற ஏராளமான வனவிலங்குகள் இரை தேடி அவ்வப்போது இப்பகுதிக்கு வந்து செல்கின்றன. மேலும் நீர், உணவு தேடியும் இவ்வகை வன விலங்குகள் காலை நேரங்களில் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இதனிடையே நேற்று இரை தேடி குருங்குடி பகுதிக்கு வந்த 2 வயது புள்ளிமான் ஒன்று அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகம் அருகிலுள்ள குளத்தில் தண்ணீர் குடித்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறிவிழுந்து தண்ணீரில் மூழ்கிய நிலையில் சிறிதுநேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. இதை பார்த்த கிராம பொதுமக்கள் சிதம்பரம் வனத்துறைக்கு உடனே தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வனத்துறை அலுவலர் அன்புமணி மற்றும் வனக்காவலர் ஸ்டாலின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த மானை மீட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறு ஆய்வுசெய்து காட்டு பகுதிக்கு கொண்டு சென்று புதைத்தனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே இரை தேடி ஊருக்குள் புகுந்த புள்ளிமான் குளத்தில் மூழ்கி பலி
0