ஆண்டிபட்டி, ஆக. 21: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிலர் காட்டுப்பன்றியை நாட்டு வெடி வைத்து வேட்டையாடியதாகவும், அதை சமைத்து சாப்பிட்டதாகவும் வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக ஆண்டிபட்டி வனத்துறை அலுவலர் அருண்குமார், வனக்காவலர் குகன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஏத்தக்கோவில் கிராமத்தை சேர்ந்த முனியப்பன், அழகநாதன், ராமர், அழகர், பாலக்கோம்பை பகுதியை சேர்ந்த குமரவேல், இவரது மகன் குமார் ஆகிய 6 பேரை வனத்துறையினர் நேற்று கைதுசெய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 8 நாட்டு வெடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 6 பேரும் ஆண்டிபட்டி போலீசாரால் தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.