முத்துப்பேட்டை, ஆக. 2: முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலையரங்கம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் இரா.முருகேசன் தலைமை வகித்தார். கலையரங்கம் தொடக்க விழாவில் மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஓவிய ஆசிரியர் கோகிலசந்திரன் மாணவர்களிடம் மறைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர இக்கலையரங்கம் பயன்படும் என்றும் மாணவர்களாகிய நீங்கள் காய்கறி, பழங்கள், களிமண், சாக்பீஸ் போன்ற பொருள்களில் வடிவங்கள் செய்தும் தாள், பானை போன்ற பொருள்களில் ஓவியங்கள் தீட்டியும் உங்கள் திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்றும் கூறினார். ஆசிரியர்கள் அருளானந்தம், முருகையன், ஆசிரியைகள் உமாராணி, வி.பொற்செல்வி மற்றும் ம.அன்புச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியை சிந்துஜா வரவேற்றார். இறுதியில் ஆசிரியை பாமா நன்றி கூறினார்.