காஞ்சிபுரம், மே 20: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இதில், தினமும் பெருமாள் காலை, மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். அந்த வகையில், ஒன்பதாம் நாள் காலை கோயில் வளாகத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் பெருமாள் உபய நாச்சியார்கள் மற்றும் பிரணஹதி வரதர் ஆகியோர் எழுந்தருளி சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பிரணஹதி வரதர் பல்லக்கில் எழுந்தருளி ஆனந்தசரஸ் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீராடி வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து பிரணஹதி வரதர் மற்றும் பெருமாள் தேவி, பூதேவி உடன் கோயிலில் எழுந்தருளினார். இவ்விழாவில், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள், மற்றும் ஊர்காவல் படையினர் மூலம் கோயில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தீர்த்தவாரி உற்சவம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
0