காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவில் மாணவ – மாணவிகள் 90.82 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேற்று கூறியதாவது: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022-2023ம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகளுக்கு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 3,324 மையங்களில் நடந்தது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் பாலித்தனர். 90 சிறை கைதிகள் என மொத்தம் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ, மாணவிகள் எழுதினர்.
இத்தேர்வின் முடிகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று காலை வெளியிட்டார். இதில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து 6,429 மாணவர்கள், 6,712 மாணவிகள் உட்பட மொத்தம் 13,141 பேர் தேர்வு எழுதினார்கள். இவர்களில் பொதுப்பாடப்பிரிவில் 12,661 பேரும், தொழில் பாடப்பிரிவில் 480 பேரும் அடங்குவார்கள். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் 13,141 பேர் எழுதினர். இதில், 11935 மாணவிகள் தேர்ச்சி பெற்று, சராசரியாக 90.82 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வில், மாணவர்களை விட மாணவிகள் 8.46 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் தரம் 31வது இடத்தில் உள்ளது. தேர்வு எழுதிய மாணவர்களில் 86.50 சதவீதம் பேரும், மாணவிகளில் 94.96 சதவீத அளவிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
செங்கை மாவட்டத்தில் 92.52% பேர் தேர்ச்சி;
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மாணவர்கள் 15,149 பேர், மாணவிகள் 16,767 பேர் என மொத்தம் 31,916 பேர் தேர்வு எழுதி இருந்தனர். தேர்வு முடிவில், தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 29,528 பேர். இதில் மாணவர்கள் 29,528 பேர் (88.89 சதவீதம்), மாணவிகள் 16,062 பேர் (95.80 சதவீதம்) என மொத்தம் 92.52 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மேலும். தேர்வு எழுதிய 59 மாற்றுத்திறனாளி மாணவர்களில், 54 பேர் (91.5 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கை 2,388. மாவட்ட அளவிலான அரசு பள்ளிகளில் எலப்பாக்கம், வெங்கம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.