காஞ்சிபுரம், ஆக. 3: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக தேவைக்கு ஏற்ப முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், மதுராந்தகம், கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருப்பதி, பாண்டிச்சேரி, விழுப்புரம், சிதம்பரம், வேலூர், சென்னை, தாம்பரம், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, சுமார் 750க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், முக்கிய வழித்தடங்கள் உள்ளிட்ட எல்லா வழித்தடங்களிலும் போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலரும் பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள், அலுவலகங்களுக்கு செல்ல அரசு பேருந்தையே நம்பி உள்ளனர்.
இந்நிலையில், முக்கிய வழித்தடங்களில் போதுமான பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பிரதான வழித்தடங்களான செங்கல்பட்டு – தாம்பரம், மதுராந்தகம் – திண்டிவனம், காஞ்சிபுரம் – வேலூர் உள்ளிட்ட சில வழித்தடங்களில் மட்டுமே போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், காஞ்சிபுரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் அலுவலக பணிக்கு செல்லும் அலுவலர்கள், தொழிலாளர்கள், காலை 6 மணி முதல் ஏறக்குறைய 8 மணி வரை காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. மேலும், பண்டிகை காலங்களில் மாலை 6 மணிக்கு மேல் அரசு பேருந்துகளை பார்ப்தே அரிதாக உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
சாமானிய மக்கள் போக்குவரத்துக்கு அரசு பேருந்துகளையே நம்பி உள்ளதால், பயணிகளின் வசதிக்கேற்ப அனைத்து வழித்தடங்களிலும் போதுமான அளவில் பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் பணிமனையில் இருந்து காஞ்சிபுரம்- தாம்பரம், காஞ்சிபுரம்- வேலூர் போன்ற வழித்தடங்களுக்கு மட்டும் பேருந்துகள் இயக்கினால் மட்டும் போதும் நம்முடைய வேலை முடிந்து விட்டது என்று காஞ்சிபுரம் பணிமனை நிர்வாகம் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நினைக்கிறார்கள். ஆனால், அரை மணி நேரத்திற்கு 5 பேருந்துகள் தாம்பரத்துக்கு இயக்கப்படுகிறது. ஆனால், காஞ்சிபுரம்- செங்கல்பட்டு இடையே குறைவான பேருந்து மட்டும் இயக்கப்படுவதனால், காஞ்சிபுரம்- செங்கல்பட்டு இடையே உள்ள பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். மேலும், ரயில் போக்குவரத்து போதுமானதாக இல்லை.
எனவே, முழுக்க முழுக்க பஸ் போக்குவரத்தை நம்பி பொதுமக்கள் உள்ளனர் என்பதை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மறந்து விடுகின்றனர். ரயில் போக்குவரத்து இருக்கின்ற தாம்பரத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆனால், செங்கல்பட்டு வழித்தடத்தை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. காஞ்சிபுரம் மற்றும் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள தென் மாவட்டத்துக்கு செல்லும் பயணிகள் ரயிலுக்கு நேரமாச்சு சார் கொஞ்சம் சீக்கிரம் பஸ்ஸை வேகமாக ஓட்டுங்கள் என்றும் செங்கல்பட்டில் இறங்கி நாங்கள் வேறு பஸ் பிடிக்க வேண்டும் என்றும் இரவு நேரங்களில் பயணிகள் டிரைவரிடத்தில் கெஞ்சும் சூழ்நிலை காணப்படுகிறது.
அதேபோல, உத்திரமேரூர் கிராமங்களை உள்ளடக்கிய உத்திரமேரூர் பணிமனையில் இருந்து போதுமான கிராம பேருந்துகளை இயக்கப்படுவதில்லை. அதனால், பணிமனை மாதிரி தெரியவில்லை. ஏதே ஒரு ஷெட் போட்டு வைத்திருப்பதுபோல உத்திரமேரூர் பணிமனை காட்சியளிக்கிறது. செங்கல்பட்டு பணிமனையில் இருந்து தாம்பரத்திற்கும், விழுப்புரத்திற்கும், திண்டிவனத்திற்கும் பேருந்து இயக்கினால் மட்டும் போதும் என்று அதிகாரிகள் நினைப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். ரயில் போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களுக்கு பஸ் போக்குவரத்தை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகின்றது.
கட் சர்வீஸ்களாக மாறிய பேருந்துகள்
கோயம்பேடு, தாம்பரம் வரை இயக்கப்பட்ட பேருந்துகள் இப்போது இயக்கப்படுவதில்லை. கட் சர்வீஸ் என்ற பெயரில் ஒரு சில பேருந்துகளை மட்டும் இயக்கிவிட்டு வேலை முடிந்தது என்று இருந்து விடுகிறார்கள். பேருந்தே இல்லை நடத்துனர் இல்லை என்று கூறும் கல்பாக்கம் பணிமனை அதிகாரிகள், கும்பகோணத்திற்கு மட்டும் குறித்த நேரத்தில் பேருந்துகளை இயக்குகிறார்கள். அரசுக்கு வருவாயா இல்லை அதிகாரிகளுக்கு வருவாயா என்று எண்ண தோன்றுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தனியார் பேருந்துகள் அதிகம்
உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரத்திற்கு ஓட்டை உடைசல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதிலும், ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு அரசு பேருந்துகளே கிடையாது. தனியார் பேருந்துகளின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கிறது. மாமல்லபுரத்தில் இருந்து திருப்பதி, வேலூர் போன்ற வழித்தடங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் எங்கே சென்று என்று தெரியவில்லை. எந்த வழித்தடத்தில் அதிக மக்கள் வசிக்கிறார்கள் எந்த வழித்தடத்துக்கு பேருந்துகள் அவசியம் என்பதை அவர்கள் உணர மறுத்து விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக கல்பாக்கம் பணிமனை என்பது அணுசக்தி குடியிருப்பில் உள்ளே இருப்பதால் அவர்கள் தினம் தினம் தப்பித்துக் கொள்கிறார்கள். போதுமான பேருந்துகள் இயக்கப்படுவதில்லை கேட்டால் டிரைவர் பற்றாக்குறை, கண்டக்டர் பார்த்தால் பற்றாக்குறை என்று கைவிரிக்கிறார்கள்.
காலியாக உள்ள பணியிடங்கள்
இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்டபோது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட ஓரிக்கை, செங்கல்பட்டு, கல்பாக்கம், மதுராந்தகம் உள்ளிட்ட பணிமனைகளில் பேருந்துகள் புதுப்பிக்கப்படாமல் உள்ளன. மேலும், போதுமான அளவில் ஓட்டுநர், நடத்துநர்களும் இல்லை. ஓட்டுநர், நடத்துநர் விடுப்பு எடுத்தால் மாற்று ஏற்பாடாக ஓட்டுநர், நடத்துநர்கள் இல்லை. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், பணியில் இருக்கும்போது இறந்தவர்கள் பணியிடங்கள் மீண்டும் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. இதனால், போதுமான அளவில் பேருந்துகளை இயக்க முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
அமாவாசை, பவுர்ணமியில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஒட்டுமொத்த காஞ்சிபுரம் மண்டலத்தில் போதுமான பேருந்துகள் இல்லை, நடத்துநர்கள் இல்லை, ஓட்டுநர்கள் இல்லை என்று கூறும் அதிகாரிகள், அமாவாசை என்றால் மேல் மலையனூருக்கும், பவுர்ணமி என்றால் திருவண்ணாமலைக்கும் பேருந்துகளை இயக்குவதற்கு மட்டும் எங்கிருந்து பேருந்துகள், நடத்துனர்கள், ஓட்டுநர்கள் வருகிறார்கள் என்றே தெரியவில்லை. தினம் பயணம் செய்யும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பு மக்களும், இந்த பவுர்ணமி, அமாவாசை நாட்களில் இரவு 10 மணி முதல் 11 மணி வரை பேருந்து நிலையங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் கூட்டமாக நின்று காத்திருந்து காத்திருந்து வாழ்க்கையை வெறுத்து விடும் அளவிற்கு அவதிப்படுகிறார்கள். இதனால் அம்மாவாசை, பவுர்ணமி நாட்களில் பயணிகள் படும் அவஸ்தையை சொல்லி மாளாது. ஆகவே அரசு போக்குவரத்து கழகத்தை உடனடியாக சீரமைத்து போதுமான நடத்துனர்களும், ஓட்டுனர்களும் நியமித்து உரிய நேரத்தில் உரிய பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.