ஊட்டி,அக்.6: தமிழக தொழிலாளர்கள், வட மாநில தொழிலாளர்கள் என பிளவுபடுத்தி மோதலை உருவாக்குவது, தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்பதையும், உரிமைகளை கேட்பதை ஒழுக்கமற்ற செயல், பண்டிகை விடுப்பு, சம்பள உயர்வு கேட்பது குற்றம். குறைவான சம்பளத்தில் வேலை பார்ப்பது தான் ஒழுக்கம் என தொழிலாளர் விரோத மற்றும் சட்டத்திற்கு எதிராக பேசும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சிஐடியு., சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு., மாவட்ட தலைவர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் நவீன்சந்திரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் வினோத் கண்டன உரையாற்றினார். இதில் காஞ்சிபுரம் கலெக்டரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் குன்னூர் தாலுக்கா செயலாளர் இளங்கோ, தலைவர் கண்ணன், விவசாய சங்க தலைவர் மாதவன்,பழனிசாமி, பிரியா, புட்டுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் ராமன் நன்றி கூறினார்.