காஞ்சிபுரம்,பிப்.16:காஞ்சிபுரத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்காமல் சாலையோர கடைகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சி தமிழ்நாட்டின் 21 மாநகராட்சிளில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக கொண்டு நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறது. நகராட்சியாக இருந்த இம்மாநகராட்சி, 2022ம் ஆண்டு ஆக்டோபர்21ம் தேதி நிறுவப்பட்டது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன.
இந்த வர்டுகளின் சாலையோரம் கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்க, இந்த சாலையோர கடைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து கொண்டு வந்து காஞ்சிபுரம் மாநகராட்சி எதிரே உள்ள அண்ணா அரங்க பகுதியில் வைக்கப்பட்டது. தற்போது, பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது வரை, வியாபாரிகளுக்கு வழங்காததால் இந்த கடைகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இவற்றை சாலையோர வியாபாரிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கழிப்பறையாக மாறிய கடைகள்
காஞ்சிபுரத்தில், கடந்த 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. அப்போது, சமையல் செய்வதற்காக ராணுவத்தினர் இந்த சாலையோர கடைகளை எடுத்து வந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் உத்திரமேரூர் பேருந்துகள் நிற்கும் இடத்தில் வைத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதே இடத்தில், பயணிகள் கழிப்பறை உள்ளதால் பேருந்துக்காக வரும் பயணிகள் இந்த சாலையோர கடைகளை இ-டாய்லெட் என நினைத்து கழிப்றையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.