காஞ்சிபுரம், ஜூன் 6: காஞ்சிபுரம் நகரில் பிரதான சாலைகளில் போக்குவரத்தை முறைப்படுத்த அமைத்த பேரிகார்டுகளால் விபத்து அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கோயில்களின் நகரம் என்று போற்றப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களை சுற்றி பார்க்கவும், பட்டுச்சேலை வாங்கவும் வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமானோர் காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர். மேலும், சென்னை மற்றும் புறநகரை ஒட்டியுள்ள பெரும்புதூர், ஒரகடம், படப்பை, சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஏராளமானோர் காஞ்சிபுரத்தில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், வாகனப்பெருக்கத்திற்கு ஏற்ப சாலைகள் 60 முதல் 150 அடி வரை அகலமாக இருந்தாலும், ஆக்கிரமிப்புகளால் அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பிரதான சாலைகளான மேற்கு ராஜவீதி, கிழக்கு ராஜவீதி, செங்கழுநீரோடை வீதி, அன்னை இந்திரா காந்தி சாலை, காமராஜர் சாலை. காந்தி சாலை, வள்ளல் பச்சையப்பன் தெரு உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்தை முறைப்படுத்த பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.போக்குவரத்தை முறைப்படுத்த அமைக்கப்பட்டுள்ள இந்த பேரிகார்டுகள் பல இடங்களில் முறையில்லாமல் நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் டூவீலரில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அதில் அமர்ந்து செல்வோர் பேரிகார்டுகளின் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. அப்பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் எதிர்பக்கம் செல்வற்கு பேரிகார்டுகளை நகர்த்தி வழி ஏற்படுத்திக் கொள்வதாக கூறப்படுகிறது. இதற்காக கம்பிகள் கொண்டு பேரி கார்டுகளை இணைத்தாலும் அதையும் வெட்டி வழி ஏற்படுத்திக் கொள்கின்றனர் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் காந்தி சாலையில் முகூர்த்த நாட்கள், விசேஷ நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, காந்தி சாலையில் கடைகளுக்கு செல்வோர் பயன்படுத்துவதற்கு தனி வழியை பிளாஸ்டிக்கால் ஆன பேரிகார்டுகளால் ஏற்படுத்தி இருந்தனர்.
டூவீலர் உள்ளிட்ட சிறு வாகனங்கள் மோதினாலே பெயர்ந்து விழும் அளவிற்கு அமைக்கப்பட்ட இந்த பேரிகார்டுகள் விரைவில் வீணாகியது. இதனால் மீண்டும் உயரமான பேரிகார்டுகளை அமைத்துள்ளனர். இந்த பேரிகார்டுகளால் பின்புறம் வரும் கார்கள் தெரியாமல் சாலையை கடக்க முயலும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சூழல் உள்ளது. மேலும், எதிரில் உள்ள கடைகள் தெரியாமல் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே, போக்குவரத்தை முறைப்படுத்த அமைக்கப்பட்ட பேரிகார்டுகளை போக்குவரத்துக்கு இடையூறாக மாறுவதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பேரிகார்டுகளால் பின்புறம் வரும் கார்கள் தெரியாமல் சாலையை கடக்க முயலும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சூழல் உள்ளது.