காஞ்சிபுரம், நவ.5 : காஞ்சிபுரத்தில் திமுக எம்எல்ஏ வீடு மற்றும் பிரபல ஜவுளிக்கடைக்கு நேற்று மாலை வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் நடுத்தெரு மற்றும் சாலைத்தெரு பகுதிகளில் பிரபலமான ஏ.எஸ்.பாபு ஷா பட்டு ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கியதையடுத்து நேற்று வழக்கம்போல் இந்த கடையில் பட்டு ஜவுளி வியாபாரம் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. இந்தநிலையில் மாலை 5.30 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய மர்மநபர், சாலைத்தெரு பகுதியில் உள்ள பட்டு ஜவுளி கடையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார். இதனையயடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்து, ஒலிப்பெருக்கி மூலம் கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றினர்.
மேலும் போலீஸ் மோப்ப நாய் நீலா அங்கு வரவழைக்கப்பட்டு கடையின் அனைத்துப் பகுதிகளிலும் வெடிகுண்டு சோதனைப் பணி நடைபெற்றது. சோதனையின் முடிவில் அங்கு வெடிகுண்டு வைக்கப்படவில்லை என்பது உறுதியானது. இதேபோல் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள திமுக எம்எல்ஏவான வக்கீல் எழிலரசன் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் எம்எல்ஏ வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதுவும் புரளி என்று உறுதி செய்யப்பட்டது. 2 இடங்களிலும் வெடிகுண்டு வைத்ததாக மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.