பெ.நா.பாளையம், ஜூலை29.கோவை கவுண்டம்பாளையம் அடுத்துள்ள உருமாண்டம்பாளையம் பொன்விழா நகர் அருகே சேன்டிஸ் என்ற மொபைல் டாய்லெட் செய்யும் கம்பெனி உள்ளது. மாநாடு, பொது கூட்டம் போன்ற நிகழ்ச்சிக்கு வைக்க ரெடிமேடு கழிவறை இங்கு தயாரிக்கபடுகிறது. இதன் அருகிலேயே கோவை மேட்டுப்பாளையம் செல்லும் ரயில்வே பாதையும் உள்ளது. இந்நிலையில் நேற்று கம்பெனி உள்ளே 5 ஊழியர்கள் டாய்லெட் பாக்சில் உள்ள பொருட்களை பிரித்து கொண்டு இருந்தனர். அப்பொது திடீரென தீ பிடித்துள்ளது. உடனடியாக அவர்கள் வெளியே ஓடிவிட்டனர்.
அதற்குள் தீ மளமளவென அங்கிருந்த மொபைல் டாய்லெட்களில் முழுவதும் பரவியது. இதுகுறித்து அந்தபகுதி மக்கள் உடனடியாக கவுண்டம்பாளையத்திலுள்ள வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் தீ கம்பெனி முழுவதும் பரவி அங்கிருந்த அலுவலக அறை மற்றும் அனைத்து மொபைல் டாய்லெட்டுகளும் எரித்து கருகியது. எரிந்த மொபைல் டாய்லெட்டிகளின் மதிப்பு சுமார் 7 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து துடியலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.