ராமேஸ்வரம், ஜூலை 9: ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள தீர்த்தக் குளங்களில் ஒன்றான சீதா தீர்த்தம் சுற்றுச்சுவர் சேதமடைந்து கழிவு நீர் சேர்ந்து சாக்கடை குட்டையாக காட்சியளிக்கிறது. இதனை சீரமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமையான தீர்த்தக் குளங்கள் அமைந்துள்ளது. தொன்று தொட்டு ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் இத்தீர்த்தங்களில் புனித நீராடி வந்தனர். மக்கள் பெருக்கம், நகர வளர்ச்சி, போக்குவரத்து அதிகரிப்பு போன்ற காரணங்களால் இக்குளங்களில் பக்தர்கள் நீராடுவதை தவிர்த்து குளத்தில் உள்ள நீரை தலையில் தெளித்துக் கொள்வது வழக்கமாக உள்ளது.
ராமேஸ்வரம் நகரில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள இக்குளங்களில் சீதாதீர்த்தமும் ஒன்று. ராமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான இத்தீர்த்தக்குளம் லெட்சுமண தீர்த்தம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது. இக்குளத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்து இடிந்தது. நாட்கள் செல்லச்செல்ல இக்குளத்தில் குப்பைகள் போடப்பட்டு, கழிவு நீர் சேர்ந்து பாசி படர்ந்து சாக்கடை குட்டையாக மாறி விட்டது. இதனால் இதில் தீர்த்தம் தெளிக்க வரும் பக்தர்கள் தீர்த்தக் குளத்தின் நிலையை பார்த்து மனம் வருந்துகின்றனர். மேலும் சமீபத்தில் இப்பகுதியில் நடைபெற்ற பாதாள சாக்கடை பணி, தேசிய நெடுஞ்சாலை துறையினரின் சாலையோர மழைநீர் வடிகால் கால்வாய் பணியினால் குளம் மேலும் சேதமடைந்தது.
கற்கள் கொட்டப்பட்டு தீர்த்தக் குளம் மெகா குப்பை தொட்டி போன்றும் காட்சியளிக்கிறது. இக்குளத்தை கடந்து செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அனைவரும் புனித சீதா தீர்த்தம் குளத்தின் நிலையை பார்த்து மனம் வருந்தி செல்கின்றனர். இக்குளத்தை சீரமைக்க வேண்டிய கோயில் நிர்வாகம் இதில் ஆர்வம் காட்டாமல் உள்ளது. மக்களால் ஆன்மீக நம்பிக்கையுடன் பக்தர்களின் பயன்பாட்டில் இருந்து வரும் சீதா தீர்த்தக்குளத்தை கோயில் நிர்வாகம் உடனடியாக மராமத்து செய்து குளத்து நீரை தூர்வாரி சுத்தப்படுத்தி தீர்த்தக்குளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.