திருப்பூர், ஜூலை3: தொழில் நகரமான திருப்பூரில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை பகுதிகளில் இருந்து பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது.அங்கு கழிவு நீரில் உள்ள பெரிய துகள்கள், குப்பைகள் மற்றும் திடப்பொருட்கள்,கரிம பொருட்கள், நச்சுத்தன்மை உள்ளிட்டவை நீக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அவை வெளியேற்றப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது.
இந்த பணிகளுக்காக திருப்பூர் சர்க்கார் பெரியபாளையம் மற்றும் ஆண்டிபாளையம் பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 15 மற்றும் 32 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையத்தை மாநகராட்சி ஆணையாளர் அமித் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மொத்த கழிவுநீர் மற்றும் அவை சுத்தகரிப்பு செய்யப்படும் முறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நிகழ்வின் போது மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ஹரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தொடர்ந்து ஆண்டிப்பாளையம் பகுதியில் 20 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் ஆய்வு மேற்கொண்டு அங்கு மரக்கன்று நட்டு வைத்தார்.