கோவை, ஆக. 26: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாவட்ட வனஅலுவலர் ஜெயராஜ், உதவி கலெக்டர்(பயிற்சி) ஆசிக்அலி, வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் வானிலையியல் குறித்தும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இடுபொருள் திட்டம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
தென்னை நலவாரியம் சார்பில் தென்னை நார் மூலம் செய்யப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிசாமி அளித்த மனுவில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம், சூலூர், பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை, காரமடை, அன்னூர், ஆகிய பகுதிகளை சார்ந்து இருக்கும் நீர் நிலைகளான குளம், குட்டை, ஏரி, பள்ளம், ஆறு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கலந்து நீர் மாசடைந்து வருகிறது. ஆகையால் நீர்நிலை சார்ந்த தொழிற்சாலை கழிவுநீர்களும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற கழிவுநீர்களும் சில இடங்களில் கலந்து நீரின் தன்மை கெட்டு நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயமும் பொதுமக்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கிராமப்புற சாலைகளில் வீட்டு கழிவுகளை கொட்டப்படுவதால் பொது சாலை விவசாயத்திற்கு இடையூறாக இருந்து வருவதாலும், சுற்றுச்சூழல் மாசுபட்டு மக்களுக்கு நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கொப்பரை கொள்முதல் தேதியை நீடிக்க வேண்டும். மேற்கு சித்திரை சாவடி பாசன மதகுகளை சரிசெய்ய வேண்டும். நொய்யல் ஆற்றில் கழிவு மற்றும் மாசு கலப்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை சம்பந்தமான மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.