நாமக்கல், மே 29: நாமக்கல் மாநகராட்சியில் கழிவுகளை அகற்றுவோர், கணக்கெடுப்பு பணி துவங்கியது. மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் ‘நமஸ்தே’ எனும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், கழிவு பொருட்கள் சேகரிப்போரின் விவரங்களை கணக்கெடுக்கும் பணி, நாமக்கல் மாநாகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. துப்புரவு அலுவலர் திருமூர்த்தி தலைமையில், தகுதியான பணியாளர் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. திடக்கழிவு மேலாண்மை பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் குறைந்தது 6 மாதங்கள் தொடர்ச்சியாக குப்பை சேகரிப்பில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
இவர்களின் சுய விவரங்கள் ‘நமஸ்தே’ திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிறது. இவர்களுக்கு தொழில் சார் பாதுகாப்பு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். மேலும், கழிவு சேகரிப்பு வாகனங்கள் வாங்க ரூ.5 லட்சம் வரையில் பெறும் கடன்களுக்கு வட்டி விலக்கு அளிக்கப்படும். நாமக்கல் மாநகராட்சியில் பணியாற்றும் 334 தூய்மை பணியாளர்கள், 55 தெருக்களில் கழிவுகளை சேகரிப்போரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பு வரும் 2ம் தேதி வரை நடைபெறுகிறது என, நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.