சென்னை: திருச்சுழி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து சென்னை தொழிலாளி பரிதாபமாக பலியானார். சென்னை வினோபா நகரைச் சேர்ந்தவர் நெல்சன்(எ) செல்லத்துரை(49), அச்சகத் தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் குற்றாலத்திற்கு சுற்றுலா செல்ல கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார். நேற்று முன்தினம் அதிகாலை விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே கடம்பன்குளம் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது நெல்சன் தனது நண்பர்களிடம் கழிவறைக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் தூக்கக் கலக்கத்தில், கழிவறை கதவு என நினைத்து ரயிலின் பக்கவாட்டு கதவை திறந்தார். இதில் ரயிலில் இருந்து நிலைதடுமாறி கீழே தவறி விழுந்து நெல்சன் பரிதாபமாக பலியானார். இதை அவரது நண்பர்கள் கவனிக்கவில்லை. தென்காசி ரயில் நிலையத்தில் இறங்கிய நண்பர்கள் அவரை தேடினர். அவரை காணாததால் தென்காசி ரயில்வே போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் ரயில் வழித்தடத்தில் தேடும் பணியில் ஈடுபட்டனர். விருதுநகர் ரயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
நேற்று முன்தினம் மாலை நரிக்குடி அருகே கடம்பன்குளம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக ஆடு மேய்க்க சென்றவர்கள் தகவல் கொடுத்தனர். விருதுநகர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தது சென்னையை சேர்ந்த நெல்சன் என்பது தெரியவந்தது. ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.