செங்கல்பட்டு, அக்.19: கள ஆய்வில் முதலமைச்சர் திட்ட ஆய்வு கூட்டத்தில், பல ஆண்டுகளாக அரசு நிலங்களில் வீடுகளை கட்டி குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் கிராம கணக்குகளில் மாறுதல் ெசய்யப்பட்ட பட்டாக்களை பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று நிர்வாக பணிகளையும் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
அதில், பல ஆண்டுகளாக அரசு நிலங்களில் வீடுகளைக் கட்டி குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டதில், கிராமக் கணக்குகளில் உரிய மாறுதல் மேற்கொள்ளப்படாமல் இருந்த பட்டாக்கள் சரி செய்யப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மாநாட்டில் முதலமைச்சர் அறிவுறுத்தியதற்கிணங்க, 16,496 பட்டாக்கள் கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்பட்டு, அதற்கான பட்டாக்களை வழங்கிடும் அடையாளமாக 15 பயனாளிகளுக்கு கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்பட்ட பட்டாக்களை நேற்று வழங்கினார்.
நீர்வழிப் புறம்போக்கு நிலங்கள், மேய்ச்சல், மந்தைவெளி, மயானம் மற்றும் பாட்டை என வகைப்பாடு செய்யப்பட்ட அரசு நிலங்கள் அத்தகைய உபயோகத்தில் இல்லாமல் நத்தமாக உபயோகத்தில் இருந்து அதில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகளைக் கட்டி குடியிருப்போருக்கு அந்நிலங்கள் அரசின் உபயோகத்திற்கு தேவை இல்லை எனில் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர் ஆகியோரைக் கொண்ட குழு அந்த நிலங்களை தணிக்கை செய்து உள்ளாட்சி மன்றங்களில் தீர்மானங்களை பெற்று தகுதியின் அடிப்படையில் குடியிருப்புகளை வரன்முறைப்படுத்த தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டது.
மேலும், சென்னை புறநகர்ப் பகுதி, நகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லைக்குள் வீட்டுமனை ஒப்படை செய்ய விதிக்கப்பட்ட தடையாணையும் ஒருமுறை மட்டுமே வரன்முறை செய்து வீட்டுமனை ஒப்படை வழங்கும் திட்டத்திற்கு முன்னர் தளர்வு செய்யப்பட்டது. மேற்படி அரசாணைகளின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் ஆட்சேபனை உள்ள மற்றும் ஆட்சேபனையற்ற அரசு நிலங்களில் வீடுகள் கட்டி 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பவருக்கு வீட்டுமனை ஒப்படை வழங்க ஏதுவாக மாவட்ட கலெக்டருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் செயல்முறை ஆணைகள் வழங்கப்பட்டு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.அந்த வகையில், 2000 – 2011 காலகட்டங்களில் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்கள் கிராமக் கணக்குகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நத்தம் அடங்கலில் ஏற்றப்படாததால், தங்களால் அதிகாரப்பூர்வமான பரிவர்த்தனை மற்றும் வங்கி கடன் பெற இயலவில்லை என்று திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பொதுமக்களிடமிருந்தும் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும் தொடர்ந்து கோரிக்கைகள் வரப்பெற்றன.
இக்கோரிக்கைகள் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு, மேற்கண்ட வீட்டுமனைப் பட்டாக்களின் கிராமக் கணக்குகளில் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு, பட்டா வழங்கப்பட்ட விவரங்களை கிராம நத்தம் அடங்கல் மற்றும் வட்ட அலுவலகங்களில் பராமரிக்கப்படும் கணினி மயமாக்கப்பட்ட நத்தம் தரவுகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர் மாநாட்டில் அறிவுறுத்தினார்.அதன்படி, முதற்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 8,136 பட்டாக்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,949 பட்டாக்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 4,411 பட்டாக்களும், என மொத்தம் 16,496 பட்டாக்கள் கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்பட்டு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று நடைபெற்ற கள ஆய்வில் முதலமைச்சர் திட்ட ஆய்வுக் கூட்டத்தில் 15 பயனாளிகளுக்கு கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்பட்ட பட்டாக்களை வழங்கினார்.
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 3,256 பட்டாக்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 பட்டாக்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 197 பட்டாக்களும், என மொத்தம் 3,462 பட்டாக்கள் கிராமக் கணக்குகளில் மாறுதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளும் விரைவில் நிறைவு பெறும். இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, அரசு துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.