Friday, February 23, 2024
Home » கள்ளச்சாரயம் தொடர்பாக 6301 வழக்குகள் பதிவு 5936 பேர் கைது, 1.85 லட்சம் லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு

கள்ளச்சாரயம் தொடர்பாக 6301 வழக்குகள் பதிவு 5936 பேர் கைது, 1.85 லட்சம் லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு

by Karthik Yash

திருவண்ணாமலை, ஜன.4: திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த ஆண்டு மட்டும் கள்ளச்சாராயம் தொடர்பாக 6301 வழக்குகள் பதியப்பட்டு 5936 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 1.85 லட்சம் லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின்படி, கலால் பிரிவு டிஎஸ்பி ரமேஷ்ராஜ் தலைமையிலான தனிப்படையினர், தொடர்ந்து சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கடத்தி வருதல் தொடர்பான ரகசிய தகவல்களின் அடிப்படையில், தனிப்படையினர் மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகளின் மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளி மாநிலங்களில் இருந்து எரிசாராயத்தை கடத்தி வரும் கும்பலை, குறிவைத்து விரட்டிச்சென்று பிடித்தது அனைவரது பாராட்டையும் பெற்றது. அதோடு, அதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததோடு, எஸ்பி கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், 6 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த ஒரு ஆண்டு மட்டும் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக 6,301 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பாக 5,936 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சாராய வழக்குகள் தொடர்பாக மட்டும் ஒரே ஆண்டில் 47 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில், 5,694 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 1238 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 20,577 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஜவ்வாதுமலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 650 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. அதோடு, சாராய வழக்குகளில் தொடர்புடைய 244 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில், 124 வாகனங்கள் ₹40 லட்சத்துக்கு பொது ஏலத்தில் விடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்படுவோரின் நடவடிக்கைகள் தொடர்ந்து போலீசாரால் கண்காணிக்கப்படுகிறது. தொடர்ந்து அதில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுகின்றனர். எனவே, கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோரிடம் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதன்மூலம், மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

two × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi