கள்ளக்குறிச்சி, ஜூன் 19: கள்ளக்குறிச்சி மதி உயிரிழந்த விவாகரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்டு புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயவேல் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ராமலிங்கம் மகள் மதி(17) பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம்தேதி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது.
இந்த கலவரத்தின்போது பள்ளி சூறையாடப்பட்டதோடு பள்ளி வாகனங்களும், போலீஸ் வாகனங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன. மதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் உயிரிழந்த மாணவி மதியின் தாயார் செல்வி பள்ளி நிர்வாகத்தினர் மீது போடப்பட்ட வழக்கு, எப்ஐஆர் நகல், சிசிடிவி காட்சிகள், ஆடியோ உரையாடல் பதிவுகள் வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். ஆனால் அதனை வழங்க இயலாது என ஏற்கனவே மனு தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் மதி மரண விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்டு மீண்டும் புலன் விசாரணை செய்ய வேண்டும் என மாணவி மதியின் தாயார் செல்வி வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கானது கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்டு புலன் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட முடியாது என கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயவேல் அதிரடியாக உத்தரவிட்டார். மாணவி மதி தாயார் செல்வி தொடர்ந்த அனைத்து வழக்குகளும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மாணவி மதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் தொடரப்பட்ட வழக்கு விசாரணையானது விரைவில் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடதக்கது.