கள்ளக்குறிச்சி, ஜூன் 24: கள்ளக்குறிச்சியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், கச்சிராயபாளையம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தானியங்களை விற்பனைக்கு எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர். அதில் நேற்று 198 விவசாயிகள், 430 மூட்டை தானியங்களை விற்பனைக்கு எடுத்து வந்தனர். அதில் 240 மூட்டை எள், 160 மூட்டை மக்காச்சோளம் மற்றும் உளுந்து, நாட்டுகம்பு, பாசிபயிறு, தட்டைபயிர் உள்ளிட்ட தானியங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனை ஆத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
100 கிலோ எடை கொண்ட மக்காச்சோளம் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.2,299க்கும், அதிகபட்சமாக ரூ.2,381க்கும் விற்பனை செய்யப்பட்டது. எள் ஒரு மூட்டை குறைந்தபட்சமாக ரூ.6,199க்கும், அதிகபட்சமாக ரூ.9,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. உளுந்து ஒரு மூட்டை குறைந்தபட்சமாக ரூ.3,309க்கும், அதிகபட்சமாக ரூ.5,199க்கும் விற்பனை செய்யப்பட்டது. நாட்டு கம்பு ஒரு மூட்டை குறைந்தபட்சமாக ரூ.2,488க்கும், அதிகபட்சமாக ரூ.2,542க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரத்தில் தானியங்கள் வரத்து குறைந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் பல்வேறு தானியங்கள் ரூ.22 லட்சத்து 42 ஆயிரத்து 521 மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டதாக கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சந்தியா தெரிவித்துள்ளார்.