சின்னசேலம், ஆக. 3: கள்ளக்குறிச்சி அருகே சொத்தை பிரித்து தர மறுத்த தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே மண்மலை காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (53). விவசாயி. இவரது மனைவி சகுந்தலா (45). இவர்களுக்கு பாண்டித்துரை(27), விஜய்(24) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பாண்டித்துரைக்கு திருமணம் ஆன நிலையில் தந்தைக்கு உதவியாக வீட்டில் இருந்து வருகிறார். இளைய மகன் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் மூத்த மகன் பாண்டித்துரை கடந்த 2 வருட காலமாக தனது தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு வந்துள்ளார். அதற்கு தந்தை மாரிமுத்து இளைய மகனுக்கு திருமணம் ஆகட்டும். அதன்பிறகு பிரித்து கொடுக்கிறேன் என்று கூறி வந்துள்ளார். இதைப்போல கடந்த மாதம் 31ந்தேதி மீண்டும் தனது தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறு பாண்டித்துரை கேட்டுள்ளார். இதையடுத்து சென்னையில் இருந்த இளைய மகன் விஜய்யை தந்தை வரவழைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை உறவினர்கள் ராமர், லட்சுமணன் ஆகியோரை வைத்து பேசி உள்ளனர். அப்போது விஜய்க்கு திருமணம் ஆனால்தான் சொத்தை பிரித்து கொடுக்க முடியும் என்று மாரிமுத்து கூறி உள்ளார்.
இதில் பாண்டித்துரைக்கும், மாரிமுத்துவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாண்டித்துரை அடுப்பங்கரையில் இருந்த கத்தியை எடுத்து தந்தை மாரிமுத்துவின் மார்பில் சரமாரியாக குத்தினார். மாரிமுத்து அலறி துடித்தபடியே மயங்கி விழுந்துள்ளார். அப்போது அங்கு வந்த உறவினர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரிமுத்துவை மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாரிமுத்துவை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து மாரிமுத்துவின் மனைவி சகுந்தலா கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்கு பதிவு செய்தார். பின்னர் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரணை நடத்தி பாண்டித்துரையை கைது செய்தனர். சொத்தை பிரித்து தர மறுத்ததால் தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.