விழுப்புரம், அக். 6: கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 10ம் வகுப்பு வரை படித்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு அங்குள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பயிற்சி வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன்(30) என்பவர் பேருந்தில் சென்று வரும் போது சிறுமியுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
மேலும் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகளைகூறி அவரிடம் நெருங்கி பழகி வந்தார். பின்னர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பாதிக்கப்பட்ட சிறுமி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஹெர்மிஸ் நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.10,000 அபராதமும் அதனை கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். சிறைதண்டனை விதிக்கப்பட்ட மணிகண்டன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார்.