கள்ளக்குறிச்சி, ஜூன் 25: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தவெக நிர்வாகிகள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டதால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள காட்டுசெல்லூர் கிராமத்தை சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஜெயமணி, சரவணன், செந்தில்முருகன் ஆகிய 3 பேரும் விஜய் பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 5வது தளத்தில் பொது நோயாளி பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மருத்துவமனைக்கு சென்றார்.
அப்போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர். இந்நிலையில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்துடன் 200க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் திரண்டு 5வது தளத்தில் சிகிச்சை பெற்று வரும் தவெக நிர்வாகியை சந்திக்க மருத்துவமனை பொது நோயாளிகள் பிரிவுக்குள் புகுந்து நோயாளிகளின் படுக்கை உள்ளிட்டவற்றின் மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த மருத்துவ உபகரணங்களையும் சேதப்படுத்தியும், கூச்சலிட்டும் அடாவடியில் ஈடுபட்டனர்.
மேலும் பொது நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்குள் திரண்டு சென்ற தவெகவினர் அங்கு சிகிச்சை பெற்றும் வரும் சக நோயாளிகளுக்கு தொந்தரவு கொடுத்தும் அரசு மருத்துவமனையில் இருந்த மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்தியதோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் வாழ்க என கூறி கோஷங்களை எழுப்பியும் விசில் அடித்து அட்ராசிட்டியில் ஈடுபட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.