கள்ளக்குறிச்சி, ஆக. 3: கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலை பகுதியில் தீயணைப்பு நிலையம் அருகில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அந்த டாஸ்மாக் கடை அருகில் அனுமதி இன்றி மதுபான பார் ஒன்று செயல்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நேற்று கள்ளக்குறிச்சி கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராபின்சன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் பகுதியை சேர்ந்த அப்துல்ரகுமான் மகன் சாகுல்அமீது(60) எனபருக்கு சொந்தமான பெட்டிகடை உள்ளது.
அதன் உள்பகுதியானது மதுபானம் குடிப்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளதையும் அப்போது அங்கு இரண்டு பேர் மதுபானம் குடித்துகொண்டு இருந்ததையும் நேரில் கண்டறிந்து அனுமதி இன்றி பார் செயல்படுவதை உறுதிசெய்யப்பட்டன. அதனையடுத்து அனுமதி இன்றி செயல்பட்ட மதுபான பாருக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து கோட்ட கலால் அலுவலர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் கள்ளக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் தெய்வீகன் தலைமையில் கிராம உதவியாளர்கள் அண்ணாமலை, கனவன் ஆகியோர் அனுமதியின்றி இயங்கிய மதுபான பார் கடையை பூட்டி அதிரடியாக சீல்வைத்தனர். அதனையடுத்து திருட்டுத்தனமாக மதுபான பார் நடத்திய கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் பகுதியை சேர்ந்த சாகுல்அமீது என்பவர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.