நாகர்கோவில், ஜூலை 4: இடைக்கோடு, களியக்காவிளை பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இடைக்கோடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, மருந்தகம், ஆய்வகம் உள்ளிட்ட பிரிவுகளை கலெக்டர் ஆய்வு செய்தார். உள்நோயாளிகள் பிரிவில் மேல் தளத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை முறைகள் குறித்தும், மேலும் அங்கு பிரசவம் மேற்கொண்டுள்ள தாய்மார்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும், பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.
மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வன்னியூர் ஊராட்சியில் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா 2023-2024 திட்டத்தின்கீழ் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் பரக்குன்று சாணி மணப்பழஞ்சி, தோட்டச்சாணி, செழுவஞ்சேரி, வடசேரிக்காலை வரை 3 கிலோ மீட்டர் தூரம் கருந்தளம் அமைக்கப்பட்ட பணியை நேரில் பார்வையிட்டார். களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.20 கோடி மதிப்பீட்டில் களியக்காவிளை புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பேருந்து நிலையமானது தரைத்தளம். முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் என்று மூன்று தளங்களை கொண்டது.
தரைத்தளத்தில் 4 கடைகள், 2 அலுவலகம், 4 ஆண்கள் கழிப்பறை மற்றும் 6 பெண்கள் கழிப்பறைகளும், முதல் தளத்தில் 2 அலுவலகம், 4 கடைகளும் 3 ஆண்கள் கழிப்பறைகளும், 5 பெண்கள் கழிப்பறைகளும், இரண்டாம் தளத்தில் மூன்று கடைகளும் அமைக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையத்தின் மொத்த பரப்பளவு 4063.29 சதுர மீட்டர் ஆகும். பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், துணை இயக்குநர் முன்னாள் படைவீரர் நலன் மேஜர் ஜெயகுமார், ஒன்றிய பொறியாளர் அஜிதாகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியம், சுரேஷ்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
காக்கும் கரங்கள் திட்டத்தில் உதவி
பின்னர் கலெக்டர் அழகுமீனா கூறுகையில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் முன்னாள் படைவீரர்கள் மற்றும் ராணுவப்பணியின் போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களின் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார். அதனடிப்படையில் 52 நபர்களுக்கு இரண்டு கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களில் 21 நபர்களுக்கு வங்கிக் கடனுக்கான இறுதி அனுமதி பெறப்பட்ட நிலையில் மீதி உள்ள நபர்களுக்கு இறுதி அனுமதி வழங்குவதை துரிதப்படுத்தும் நோக்கத்துடன் நாகர்கோவில் நாகராஜா திடலில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் அவர்களின் அலுவலகத்தில் வைத்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்துள்ள அனைத்து முன்னாள் படைவீரர்களும் தொழிலதிபர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து அனுமதிகள் வழங்கிடுமாறு வங்கி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது’ என்றார்.