மார்த்தாண்டம், ஜூன் 30: களியக்காவிளை அருகே கைதாகுழி பகுதியை சேர்ந்தவர் பைசல்கான் (32). களியக்காவிளை மார்க்கெட்டில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கும் கோழிவிளையை சேர்ந்த பிரபல ரவுடியான ராமச்சந்திரன் (32) என்பவருக்கும் கடையில் மேற்கூரை அமைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பைசல்கான் மார்க்கெட் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ராமச்சந்திரன் முன்விரோதம் காரணமாக பைசல்கானை தகாத வார்த்தைகளால் திட்டியும், இரும்பு கம்பியால் நெஞ்சிலும் தாக்கினார். மேலும் கம்பியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இது குறித்து பைசல்கான் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறைச்சி கடைக்காரரை தாக்கிய ரவுடி ராமச்சந்திரனை கைது செய்தனர். கைதான ராமச்சந்திரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.