களக்காடு, ஜூன் 25: களக்காட்டில் மது அருந்துவதற்காக வீட்டின் தகரக் கதவை கழற்றி திருட முயன்ற வாலிபரை பொதுமக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். களக்காடு வியாசராஜபுரம், முஸ்லிம் தெற்குத் தெருவைச் சேர்ந்த ஜமால் மைதீன் மகன் நத்தடு பாவா (30). வள்ளியூரில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் தங்கநகை பிரிவில் மேலாளராக வேலை பார்த்து வரும் இவர், சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை வேளையில் வீட்டின் முன் சத்தம் கேட்கவே திடுக்கிட்டு விழித்த நத்தடு பாவா அங்கு சென்று பார்த்த போது வாலிபர் ஒருவர் வீட்டின் முன்புள்ள தகரக் கதவை கழற்றி திருடும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
இதைப்பார்த்து பதறிய நத்தடு பாவா சத்தம் போட்டார். சுதாரித்துக் கொண்ட அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருப்பினும் நத்தடு பாவா, அவரது உறவினர் ஆதம் ஷரீப் மற்றும் அக்கம்பக்கத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் விரட்டிச் சென்று வாலிபரை மடக்கிப் பிடித்து களக்காடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்டவர், கலுங்கடி நேதாஜி நகரை சேர்ந்த ஐசக் மகன் பிரவின் (23) என்பதும், மது அருந்துவதற்காக கதவை கழற்றி திருட முயற்சித்தது தெரிய வந்தது. அவரை போ லீசார் கைது செய்தனர்.