களக்காடு, ஜூன் 1: களக்காடு அருகே சூறைகாற்றுடன் பெய்த மழையினால் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து நாசமானது. இதனால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். களக்காடு பகுதியில் கடந்த 1 வாரமாக சாரல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் ஆறு மற்றும் கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தலையணையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தலையணை மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் களக்காடு அருகேயுள்ள மஞ்சுவிளை அரசப்பத்து பகுதியில் சூறை காற்றுடன் சாரல் மழை பெய்தது. சுழன்று அடித்த காற்றினால் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து நாசமானது. இவைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்த வாழைகள் மஞ்சுவிளையை சேர்ந்த விவசாயி தேவராஜ் (55) என்பவருக்கு சொந்தமானது. குலை தள்ளி அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து வாழைகள் காற்றினால் சேதமடைந்ததால் அவருக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதி விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கியும், தங்கநகைகளை அடகு வைத்தும் விவசாயம் செய்து வருகின்றனர். பயிர்களை காப்பாற்ற விளைநிலங்களில் இரவு, பகலாக பாடுபட்டு வருகின்றனர். வனவிலங்குகளும் பயிர்களை சேதப்படுத்தி வரும் நிலையில் சூறை காற்றினாலும் வாழைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை திரும்ப செலுத்துவது எப்படி? நகைகளை மீட்பது எப்படி? என்பது தெரியாமல் தவிப்பு அடைந்துள்ளனர். எனவே அதிகாரிகள் காற்றினால் சாய்ந்த வாழைகளை கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி சில்கிஸ் சாமுவேல் கூறுகையில், ‘உரிய நேரத்தில் உரமிட்டு, தண்ணீர் பாய்த்து பாதுகாத்து வந்த வாழைகள் குலை தள்ளி மகசூல் தரும் வேளையில் சூறை காற்றினால் நாசமாகி விட்டது. ஏற்கனவே இப்பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதுபோல காற்றினால் ஆயிரக்கணக்கான வாழைகள் சேதமடைந்தது. அதற்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை” என்றார்.