திண்டுக்கல், நவ. 16: நிலக்கோட்டை அருகே முசுவனூத்து பகுதி மக்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது: முசுவனூத்து ஊராட்சிக்குட்பட்ட கடவாகுறிச்சி மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு ஆகும். இதன் அருகே கோனஉருண்டை கரட்டில் 2 கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு நேரத்தில் சட்டவிரோதமாக அரசு நிர்ணயித்ததற்கு மேல் அதிபயங்கர வெடி வைத்தும், வருவாய் துறை அளவீடு செய்து வேலியிடாமல் முறைகேடாக மலையை தகர்த்து வருகின்றனர்.
நாள் ஒன்றுக்கு 150க்கு மேற்பட்ட லாரிகளில் 10க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வெட்டி எடுத்து மலையை அழித்து வருகின்றனர். இதனால் கடவாகுறிச்சி மலைக்குள் வாழும் காட்டு பன்றிகள் வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருக்கும் விளை பொருட்களை அழித்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில் இன்னும் சில நபர்களும் வனச்சரக அலுவலகத்தில் தடையில்லா சான்றுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. இந்த கல்குவாரியால் வன விலங்குகளும், பறவை இனங்களும் முற்றிலுமாக அழியக்கூடிய ஆபத்தில் உள்ளது. எனவே குவாரி நடத்துவதற்கு தடையில்லா சான்று வழங்க கூடாது. ஏற்கனவே குவாரிக்கு நடத்துவதற்க்கு வழங்கப்பட்டிருக்கும் தடையில்லா சான்றை திரும்ப பெற்று அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.