தூத்துக்குடி, ஆக. 20: தூத்துக்குடியில் கல்வீசி தாக்கி அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு அரசு பேருந்து நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை ஏரல் ராஜபதி ஒத்தவீடு பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் அய்யாத்துரை (32) என்பவர் ஓட்டி வந்தார். தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே திருச்செந்தூர் சாலையில் பஸ் வரும்போது ஒருவர் மோட்டார் பைக்கை குறுக்கே நிறுத்தி பேருந்தை நிறுத்தியுள்ளார். மேலும் தனது நண்பரை பஸ்சில் ஏற்றிய பிறகே பைக்கை எடுப்பேன் என்று கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர், கல்லால் தாக்கி பஸ்சின் பின்பக்க கண்ணாடிய உடைத்துள்ளார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் டிரைவர் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்த முருகப்பெருமாள் (30) என்பவரை கைது செய்தார்.